தலைவர்களின் தேர்தல் பிரசாரத்தால் ஹெலிகாப்டர்களுக்கு கடும் கிராக்கி


தலைவர்களின் தேர்தல் பிரசாரத்தால் ஹெலிகாப்டர்களுக்கு கடும் கிராக்கி
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தலைவர்களின் தேர்தல் பிரசாரத்தால் ெஹலிகாப்டர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் வாடகை கட்டணம் 15 சதவீதம் உயர்ந்துள்ளது.

பெங்களூரு:

தலைவர்களின் தேர்தல் பிரசாரத்தால் ெஹலிகாப்டர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் வாடகை கட்டணம் 15 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஹெலிகாப்டர்களுக்கு கிராக்கி

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 23 நாட்களே உள்ளன. இதனால் தேர்தல் களம் பரப்பாகி வருகிறது. தேர்தல் பிரசாரத்திற்காக தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் ஒரே நாளில் வெவ்வேறு மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அவர்கள் ஹெலிகாப்டர்களில் சென்று பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் கர்நாடகத்தில் தற்போது ஹெலிகாப்டர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹெலிகாப்டர்கள் தேவை அதிகரிப்பு மற்றும் அதற்கு எவ்வளவு வாடகை என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்விவரம் பின்வருமாறு:-

150 ஹெலிகாப்டர்கள் முன்பதிவு

கர்நாடகத்தில் 100-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய ரக விமானங்கள் உள்ளன. தேர்தல் பிரசாரத்திற்காக ஹெலிகாப்டர், சிறிய ரக விமான தேவை அதிகரித்துள்ளதால், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் ஹெலிகாப்டர்களை வெளிமாநிலங்களில் இருந்து வாடகைக்கு அழைத்து வந்துள்ளனர்.

குறிப்பாக கோவா, ஆந்திரா, மராட்டியம், ஆந்திரா, ஜெய்ப்பூர், டெல்லி, கொல்கத்தா, கொச்சி ஆகிய இடங்களில் இருந்து ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன. சுமார் 150 ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய ரக விமானங்கள் அரசியல் வாதிகளால் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் ஹெலிகாப்டர், சிறிய ரக விமானங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் அதன் கட்டணத்தை 15 சதவீதம் வரை உயர்த்தி உள்ளன.

கட்டணம் விவரம்

இரு இருக்கைகள் கொண்ட ஹெலிகாப்டருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரமும், 4 இருக்கைகள் கொண்ட ஹெலிகாப்டருக்கு ரூ. 2 லட்சத்து 60 ஆயிரமும், 8 இருக்கைகள் கொண்ட ஹெலிகாப்டருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.3½ லட்சமும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

13 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானத்திற்கு ஜி.எஸ்.டி. வரி உள்பட ஒரு மணி நேரத்திற்கு ரூ.4 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஹெலிகாப்டர்கள் தரையிறங்க பெங்களூருவில் ஐக்கூரு, எச்.ஏ.எல்., விமான நிலையம், ஒயிட்பீல்டு பகுதிகளில் ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதுபோல் உப்பள்ளி, பெலகாவி, பீதர், பல்லாரி, கலபுரகி, மைசூரு, கோலார், மங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஹெலிகாப்டர்கள் தரையிறங்க ஹெலிபேடுகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளன.


Next Story