இமாசல பிரதேசத்தில் 6 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம்..? உத்தரவை ஒத்திவைத்த சபாநாயகர்


இமாசல பிரதேசத்தில் 6 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம்..? உத்தரவை ஒத்திவைத்த சபாநாயகர்
x

சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா

மாநிலங்களவைத் தேர்தலுக்கு கட்சியின் கொறடா உத்தரவு பொருந்தாது என்று மூத்த வழக்கறிஞர் சத்ய பால் ஜெயின் தெரிவித்தார்.

இமாசல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 6 பேர், மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி பா.ஜ.க. வேட்பாளருக்கு ஓட்டு போட்டு அவரை வெற்றி பெறச் செய்தனர். அதன்பின்னர் கட்சியின் மூத்த தலைவர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்யா சிங் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதாக பா.ஜ.க. கூறியது. அத்துடன், சட்டசபையில் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்த தொடர் திருப்பங்களால் இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டால் அரசுக்கு சிக்கல் ஏற்படும்.

இந்நிலையில், கட்சி மாறி ஓட்டு போட்ட 6 எம்.எல்.ஏ.க்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்யும்படி காங்கிரஸ் கட்சி தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், மாநிலங்களவை தேர்தலில் கொறடா உத்தரவை 6 எம்.எல்.ஏ.க்கள் மீறியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா, உத்தரவை ஒத்திவைத்துள்ளார். அனேகமாக 6 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சட்டசபையில் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் சவுகான் பேசும்போது,'பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும்படி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், 6 எம்.எல்.ஏ.க்கள் அதை மீறி, வெளியே இருந்தனர். அதனை சபாநாயகர் கவனத்தில் கொள்ளவேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

முன்னதாக 6 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சபாநாயகரிடம் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சத்ய பால் ஜெயின், மாநிலங்களவைத் தேர்தலுக்கு கட்சியின் கொறடா உத்தரவு பொருந்தாது என்று தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகரின் நோட்டீஸ் மற்றும் காங்கிரசின் மனுவின் நகல் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், மற்ற ஆவண இணைப்புகள் வழங்கப்படவில்லை என்றும் வாதிட்டார்.

மேலும், சபாநாயகரின் நோட்டீசுக்கு பதில் அளிப்பதற்கு 7 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளதால், அவகாசம் வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.


Next Story