உண்மையான சிவசேனா உத்தவ் தாக்கரே தலைமையில் தான் இருக்கிறது - சஞ்சய் ராவத்


உண்மையான சிவசேனா உத்தவ் தாக்கரே தலைமையில் தான் இருக்கிறது - சஞ்சய் ராவத்
x

உண்மையான சிவசேனா உத்தவ் தாக்கரே தலைமையில் தான் இருக்கிறது. தேர்தல் ஆணையத்திடம் இருந்து எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று சஞ்சய் ராவத் எம்.பி. நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிவசேனா பிளவு

சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி சிவசேனா கட்சியில் ஏற்பட்ட உள்பூசல் காரணமாக கவிழ்ந்தது. அந்த கட்சியின் முக்கிய தலைவரான ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் தனி அணியை உருவாக்கியதால் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கைகோர்த்து பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றினார். அவர் முதல்-மந்திரியாகவும் பொறுப்பேற்றார். இதன் காரணமாக சிவசேனா உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியாகவும் பிளவுபட்டுள்ளது.

சட்ட போராட்டம்

இந்தநிலையில் 2 அணிகளும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று கூறி வருகின்றனர். இரு பிரிவினரும் இதற்காக சட்டப்போராட்டத்தில் இறங்கி உள்ளனர். சிவசேனா இரு கோஷ்டிகளின் மனுக்களை தேர்தல் ஆணையம் ஜனவரி 12-ந் தேதி விசாரிக்க உள்ளது.

இந்தநிலையில் இது குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று கூறியதாவது:-

முன் உதாரணம்

ஒரே ஒரு சிவசேனா தான் இருக்கிறது. இது பாலாசாகேப் தாக்கரேவால் நிறுவப்பட்ட சிவசேனா. அந்த சிவசேனா உத்தவ் தாக்கரே தலைமையில் தான் உள்ளது. முழு சிவசேனாவும் அவருக்கு பக்கபலமாக உள்ளது. சிவசேனா சின்னத்தில் வெற்றி பெற்ற தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியதை கட்சியில் ஏற்பட்ட பிளவு என்று கூறமுடியாது. இவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்.

தன்னாட்சி மற்றும் சுதந்திரமான அமைப்பான தேர்தல் ஆணையத்தை நாங்கள் நம்புகிறோம். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் போன்ற முன் உதாரணத்தை நாங்கள் பெற்றுள்ளோம். இதுவரை அந்த நிறுவனத்தில் சுதந்திரமும், சுயாட்சியும் தென்படவில்லை. அதில் உள்ளவர்கள் அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிவசேனா கட்சியின் 56 எம்.எல்.ஏ.க்களில் 39 பேர் தற்போது முதல்-மந்திரி ஷிண்டே அணியில் உள்ளனர். 18 எம்.பி.க்களில் 13 பேர் அந்த அணியில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story