சேலையால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை - கணவர் வெறிச்செயல்


சேலையால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை - கணவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 8 April 2024 6:38 AM IST (Updated: 8 April 2024 12:44 PM IST)
t-max-icont-min-icon

குடும்ப பிரச்சினையில் கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் உண்டானது.

பெங்களூரு,

பெங்களூரு காமாட்சி பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரங்கநாதபுராவில் வசித்து வந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி நேத்ராவதி (வயது 32). இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. தனியார் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தொழிலாளியாக வெங்கடேஷ் வேலை பார்த்து வருகிறார். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

மேலும் வெங்கடேசுக்கு மதுஅருந்தும் பழக்கமும் இருந்தது. அவர் தினமும் மதுஅருந்திவிட்டு வந்து தனது மனைவி நேத்ராவதியுடன் சண்டை போட்டு வந்துள்ளார். நேற்று முன்தினமும் அவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது குடும்ப பிரச்சினையில் தம்பதி இடையே வாக்குவாதம் உண்டானது. உடனே தனது குழந்தையுடன் தூங்குவதற்காக படுக்கை அறைக்கு நேத்ராவதி சென்று விட்டார்.

ஆனாலும் ஆத்திரம் தீராத வெங்கடேஷ், குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்த நேத்ராவதியின் கழுத்தை சேலையால் இறுக்கியதாக கூறப்படுகிறது. இதில், நேத்ராவதி மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதையடுத்து வெங்கடேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையே தூங்கி கொண்டிருந்த குழந்தை எழுந்து அழ தொடங்கியதும், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் வந்து பார்த்த போது தான் நேத்ராவதி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் காமாட்சி பாளையா போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் நேத்ராவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை சேலையால் கழுத்தை இறுக்கி வெங்கடேஷ் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காமாட்சி பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வெங்கடேசை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story