"செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்காக சென்னைக்கு வர ஆர்வமாக இருக்கிறேன்" - பிரதமர் மோடி
தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது நமக்கு மிகப்பெரிய பெருமை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, வருகிற 28-ந்தேதி(இன்று) முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்கின்றனர். ஓபன் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் இடம்பெறுகின்றன.
இதனிடையே சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியின் தொடக்கவிழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று(வியாழக்கிழமை) சென்னை வருகிறார். பிரதமரின் வருகையையொட்டி சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னைக்கு வருகை தருவது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-
"44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக சென்னை வருவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். இந்த சிறப்பான போட்டி இந்தியாவில், அதுவும் செஸ் விளையாட்டுடன் பெருமைமிகு தொடர்பைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில் நடைபெறுவது நமக்கு மிகப்பெரிய பெருமை ஆகும்."
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.