கர்நாடக அரசு பஸ்களில் அனைத்து பெண்களுக்கும் இலவச பயணம்


கர்நாடக அரசு பஸ்களில் அனைத்து பெண்களுக்கும் இலவச பயணம்
x
தினத்தந்தி 30 May 2023 6:45 PM GMT (Updated: 30 May 2023 6:47 PM GMT)

கர்நாடகத்தில் அரசு பஸ்களில் அனைத்து தரப்பு பெண்களும் இலவசமாக பயணிக்கலாம் என்றும், இந்த திட்டத்தில் எந்தவித கட்டுப்பாடும் கிடையாது என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஜூன் முதல் வாரத்திலேயே அமலுக்கு வரலாம் என கூறப்படுகிறது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் அரசு பஸ்களில் அனைத்து தரப்பு பெண்களும் இலவசமாக பயணிக்கலாம் என்றும், இந்த திட்டத்தில் எந்தவித கட்டுப்பாடும் கிடையாது என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஜூன் முதல் வாரத்திலேயே அமலுக்கு வரலாம் என கூறப்படுகிறது.

5 உத்தரவாத திட்டங்கள்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி 5 உத்தரவாதங்களுடன் தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இந்த 5 திட்டங்களையும் நிறைவேற்றுவோம் என்றும் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் வீடு, வீடாக வினியோகித்து வாக்கு சேகரித்தனர்.

அதாவது, கிரகஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு தலா 200 யூனிட் வரை இலவச மின்சாரம், கிரக லட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் தலா 10 கிலோ அரிசி, வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் தலா ரூ.3 ஆயிரம், பாலிடெக்னிக் படித்தோருக்கு மாதம் தலா ரூ.1,500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் முதலாவது மந்திரிசபை கூட்டத்திலேயே இதற்கு ஒப்புதல் வழங்கி அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறினர்.

முதல் மந்திரிசபையில் ஒப்புதல்

அதன்படி கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. சித்தராமையா ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளிலேயே இந்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்ற மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஆனால் அவற்றை அமல்படுத்துவதற்கான தேதியை அரசு அறிவிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் மாநில அரசை கடுமையாக குறை கூறி வருகின்றன. முதல் நாளிலேயே அந்த வாக்குறுதிகளை அமல்படுத்துவதாக கூறிய காங்கிரஸ் மக்களை ஏமாற்றிவிட்டதாக அந்த கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

டிக்கெட் பெற மாட்டோம்

மாநிலத்தின் சில பகுதிகளில் கிராம மக்கள் மின் கட்டணத்தை செலுத்த மாட்டோம் என்று கூறி வருகிறார்கள். பஸ்களில் பயணிக்கும் சில பெண்கள், காங்கிரசின் வாக்குறுதியை சுட்டிக்காட்டி டிக்கெட் பெற மாட்டோம் என்று கூறி நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய சம்பவங்களால் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 5 திட்டங்களை அமல்படுத்தினால் அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதிச்சுமை ஏற்படும் என்று சித்தராமையாவே கூறியுள்ளார்.

இந்த திட்டங்களை அமல்படுத்தும் நிகழ்ச்சி வருகிற 1-ந் தேதி (நாளை) நடைபெறும் என்று மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக முதல்-மந்திரி சித்தராமையா உள்பட சம்பந்தப்பட்ட மந்திரிகள் தங்களின் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இன்று (புதன்கிழமை) மந்திரிகளுடன் சித்தராமையா பெங்களூருவில் ஆலோசனை நடத்துகிறார்.

பெண்களுக்கு இலவச பயணம்

இந்த நிலையில் மந்திரியாக பதவி ஏற்ற பிறகு போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்கரெட்டி முதல் முறையாக அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாக இயக்குனர் சத்தியவதி உள்பட 4 அரசு போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்குவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பிறகு மந்திரி ராமலிங்கரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டது. பெண்கள், அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்று அறிவித்தோம். அப்போது நாங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கு மட்டும் இது பொருந்தும் என்று கூறவில்லை. அதனால் அனைத்து பெண்களும் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்படும். இதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படாது.

ரூ.100 கோடி இழப்பு

இன்றைய (நேற்று) கூட்டத்தில் புதிதாக பஸ்களை வாங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தினோம். கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் தனது பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. அதனால் கே.எஸ்.ஆர்.டி.சி.க்கு 300-க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளன. கர்நாடக போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 23 ஆயிரத்து 978 பஸ்கள் ஓடுகின்றன. ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 450 பேர் பணியாற்றி வருகிறார்கள். 240 பணிமனைகள் இருக்கின்றன.

15 ஆண்டுகளுக்கு மேல் இயங்கும் பஸ்களின் சேவையை நிறுத்தும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் புதிய பஸ்களை வாங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் ரூ.23.13 கோடி வருவாய் கிடைக்கிறது. 4 போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்படும் என்று மதிப்படப்படுகிறது.

அரசுடன் ஒப்பந்தம்

பெண்களுக்கு இலவச பயணம் குறித்து 1-ந் தேதி (நாளை) நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். எத்தனை பெண்கள் பஸ்களில் பயணம் செய்தாலும் அத்தனை பேருக்கும் இலசவ பயணம் அனுமதிக்கப்படும். இலவச பயண திட்டத்தை அமல்படுத்தினால் தினசரி வருவாயில் 50 சதவீதம் குறையும். பஸ்களின் டீசலுக்கு மட்டும் தினமும் ரூ.15 கோடி செலவாகிறது. இலவச பயணத்திற்கு ஆகும் செலவை ஈடுகட்ட அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும்.

இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார்.

அநேகமாக ஜூன் முதல் வாரத்திலேயே இந்த 5 உத்தரவாத திட்டங்களை அமலுக்கு கொண்டுவர சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story