பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்-மந்திரியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்


பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்-மந்திரியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்
x

பாஜக ஆதரவுடன் பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றுள்ளார்.

பாட்னா,

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் இணைந்து மகாகத்பந்தன் என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ்குமார் மாநில முதல்-மந்திரியாகவும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியாகவும் செயல்பட்டு வந்தனர்.

இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் நிதிஷ்குமார் ஈடுபட்டு வந்தார். ஆனால், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் மாநிலத்தில் கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுடன் நிதிஷ்குமாருக்கு முரண்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியா கூட்டணியில் இருந்து விலக நிதிஷ்குமார் முடிவெடுத்தார்.

அதேபோல், மாநிலத்திலும் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் உள்ள கூட்டணியில் இருந்தும் விலக நிதிஷ்குமார் முடிவெடுத்தார். இந்த கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி அமைக்க நிதிஷ்குமார் திட்டமிட்டார்.

அதன்படி, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகினார். பின்னர், கவர்னரை சந்தித்த நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். மேலும், ராஜினாமா கடிதத்தையும் நிதிஷ்குமார் வழங்கினார். இதனால், மகாகத்பந்தன் கூட்டணி அரசு கவிழ்ந்தது.

இதனை தொடர்ந்து, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு பாஜக ஆதரவு அளித்தது. பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆட்சியமைக்க நிதிஷ்குமார் கவர்னரை சந்தித்தார். இதையடுத்து, ராஷ்டிரிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவர் 9வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார்.

பாட்னாவில் நடைபெற்ற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லோகர், முதல்-மந்திரியாக நிதிஷ்குமாருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுதிரி, விஜய் சின்ஹா ஆகிய 2 பேரும் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர்.


Next Story