பீகார் முதல்-மந்திரி பதவியை நாளை ராஜினாமா செய்யும் நிதிஷ்குமார்...?


பீகார் முதல்-மந்திரி பதவியை நாளை ராஜினாமா செய்யும் நிதிஷ்குமார்...?
x

பீகார் முதல்-மந்திரி பதவியை நிதிஷ்குமார் நாளை காலை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாட்னா,

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் இணைந்து மகாகத்பந்தன் என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ்குமார் மாநில முதல்-மந்திரியாகவும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் நிதிஷ்குமார் ஈடுபட்டு வந்தார். ஆனால், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் மாநிலத்தில் கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுடன் நிதிஷ்குமாருக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா கூட்டணியில் இருந்து விலக நிதிஷ்குமார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், மாநிலத்திலும் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் உள்ள கூட்டணியில் இருந்தும் விலக நிதிஷ்குமார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்-மந்திரி பதவியேற்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். இதற்காக நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவியை இன்று ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்-மந்திரி பதவியை நிதிஷ்குமார் இதுவரை ராஜினாமா செய்யவில்லை.

இந்நிலையில், மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து விலகும் வகையில் பீகார் முதல்-மந்திரி பதவியை நிதிஷ்குமார் நாளை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை முதல்-மந்திரி பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்ய உள்ளார். அதன்பின்னர், ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளது. அதன்பின்னர் பாஜக கூட்டணியுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story