எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சி - காங்கிரஸ் குற்றச்சாட்டு


எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சி - காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 27 Jan 2024 12:33 PM GMT (Updated: 27 Jan 2024 12:42 PM GMT)

எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சித்துவருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

டெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. அதேவேளை, ஆளும் பாஜகவை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகள் 'இந்தியா' என்ற கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், சமீபத்தில் இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்காளத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ஆனால், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், பஞ்சாப்பில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்துள்ளது. தனித்து போட்டியிட்டாலும் இந்தியா கூட்டணியில் தொடர்வதாக அம்மாநில முதல்-மந்திரி பகவத்மான் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பீகாரில் லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி அமைய நிதிஷ்குமார் முக்கிய பங்காற்றினார்.

அதேவேளை, இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்துவரும் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 'இந்தியா' கூட்டணியில் இருந்து விலக நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியில் இருந்து விலகி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவுடன் கூட்டணியமைத்து மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மேலும் பின்னடைவை சந்தித்துள்ளது.

அதேவேளை, நிதிஷ்குமாரை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நிதிஷ்குமாரை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்துள்ளார். ஆனால், அவரின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் சிறு பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்படவில்லை. நிதிஷ்குமாரை தொடர்புகொண்டு பேச எங்கள் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சித்து வருகிறார். ஆனால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் கார்கேவுடன் பேச முடியவில்லை என்று நிதிஷ்குமாரின் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைவதில் முக்கிய பங்காற்றிய மம்தா பானர்ஜியும், நிதிஷ்குமாரும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் தொடர்ந்து இருப்பார்கள் என நம்புகிறேன்' என்றார்.


Next Story