விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்க தாமதமானதால் நடந்து சென்ற பயணி சுருண்டு விழுந்து உயிரிழப்பு


விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்க தாமதமானதால் நடந்து சென்ற பயணி சுருண்டு விழுந்து உயிரிழப்பு
x

சக்கர நாற்காலி வழங்க தாமதமானதால் நடந்து சென்ற பயணி சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் விமான நிலையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கடந்த 12ம் தேதி மராட்டியத்தின் மும்பைக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் வயதான தம்பதியும் அடக்கம். இருவருக்கும் 80 வயதிற்கும் மேல் இருந்ததால் பயணிகள் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து விமான நிலையத்திற்கு அழைத்து செல்ல சக்கர நாற்காலி தேவைப்பட்டது. இதையடுத்து, ஒரு சக்கர நாற்காலி கொண்டுவரப்பட்டது. அதில், ஆண் பயணி தனது மனைவியான பெண் பயணியை அமரவைத்துள்ளார். விமான நிலையத்தில் அந்த சமயத்தில் சக்கர நாற்காலி பயன்பாடு அதிகமாக இருந்ததால் ஆண் பயணிக்கு சக்கர நாற்காலி கிடைக்க தாமதமானது.

இதையடுத்து, முதியவரான அந்த பயணி தன் மனைவியை சக்கர நாற்காலியில் அழைத்துக்கொண்டு நடந்து சென்றார். சிறிது நேரம் காத்திருக்குமாறும் சக்கர நாற்காலி கிடைத்த உடன் செல்லலாம் எனவும் விமான ஊழியர்கள் அறிவுறுத்திய நிலையில் காலதாமதம் ஆனதால் வயதான அந்த பயணி தன் மனைவியை நாற்காலியில் அமர வைத்து, தான் நடந்து சென்றார்.

நடந்து சென்ற அந்த பயணி திடீரென விமான நிலையத்திலேயே சுருண்டு விழுந்தார். இதனால் அப்பயணியின் மனைவி மற்றும் விமான ஊழியர்கள் உடனடியாக மருத்துவக்குழுவிற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மருத்துவ ஊழியர்கள் அந்த பயணியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பயணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story