செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க எதிர்ப்பு: மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க எதிர்ப்பு: மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 5 Jan 2024 5:44 AM IST (Updated: 5 Jan 2024 1:34 PM IST)
t-max-icont-min-icon

செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.

புதுடெல்லி,

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராகவும் நீடிக்கிறார்.

அவர் எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக்கோரி வக்கீல் எஸ்.ராமச்சந்திரன், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதேபோல செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை கவர்னர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வக்கீல் எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என கூறியதுடன், செந்தில்பாலாஜி அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து முதல்-அமைச்சர்தான் முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராகவும், அமைச்சர் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை கவர்னர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வக்கீல் எம்.எல்.ரவி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல்புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது.

1 More update

Next Story