விவசாயிகளின் நலனுக்காக தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு


விவசாயிகளின் நலனுக்காக தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2023 11:57 PM GMT (Updated: 2 Oct 2023 5:26 AM GMT)

மஞ்சள் பயிரிடும் விவசாயிகளின் நலனுக்காக தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

மகபூப்நகர்,

விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் தெலுங்கானாவில் ரூ.13,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மகபூப்நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் மாநில பாரதிய ராஷ்டிர சமிதி அரசை கடுமையாக சாடினார்.

நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-

மேன்மை மிகு நிறுவனம்

தெலுங்கானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் பயிரிடும் விவசாயிகளின் நலனுக்காக தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும்.

இது வினியோகச் சங்கிலியில் மதிப்புக் கூட்டல் மற்றும் விவசாயிகளுக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு உதவும்.

மஞ்சள் வாரியம் அமைப்பதற்காக தெலுங்கானா மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் மஞ்சள் விவசாயிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்துக்கு மேன்மை மிகு நிறுவனம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் சிறப்பு நிதியும் அளிக்கப்பட்டு உள்ளது.

பழங்குடியினர் பல்கலைக்கழகம்

தெலுங்கானாவின் முளுகு மாவட்டத்தில் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். அதற்கு பழங்குடியினரின் தெய்வமாகிய சம்மக்கா-சாரக்காவின் பெயர் சூட்டப்படும்.

இந்த பல்கலைக்கழக கட்டுமானத்துக்காக ரூ.900 கோடி செலவிடப்படும். இதற்காக தெலுங்கானா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

தெலுங்கானா மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பா.ஜனதா உறுதிபூண்டுள்ளது.

மாற்றத்தை விரும்பும் தெலுங்கானா

தெலுங்கானா, ஒரு மாற்றத்தை விரும்புகிறது. ஏனெனில் அது பா.ஜனதா அரசை விரும்புகிறது.

ஊழல் மலிந்த அரசை தெலுங்கானா மக்கள் விரும்பவில்லை, மாறாக ஒரு வெளிப்படையான, நேர்மையான அரசை விரும்புகிறார்கள். பொய்யான வாக்குறுதிகளை அவர்கள் விரும்பவில்லை, களத்தில் உறுதியாக பணி செய்யும் அரசை விரும்புகிறார்கள்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு சட்டமன்றத்திலும் இனி பெண்களின் குரல் முன்பிருந்ததை விட வலிமை பெறும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


Next Story