தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு - கர்நாடகாவில் விவசாயிகள் இரவு முழுவதும் போராட்டம்
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கே.ஆர்.எஸ் அணை முன்பு இரவு முழுவதும் கையில் தீப்பந்தம் ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு,
தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. குறிப்பாக வறட்சி காலத்தில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த ஆண்டு கர்நாடகத்தில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் காவிரி படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் நிரம்பவில்லை. கபினி அணை மட்டும் நிரம்பியது.
இதற்கிடையே காவிரியில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்திற்கான பங்கை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில், காவிரியில் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி, தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்குமுறை குழு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீதம் 15 நாட்களுக்கு திறந்து விடக்கூறி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்டது.
கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு 7,329 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய கட்சியின் சட்டமன்ற பிரதிநிதி தர்ஷன் புட்டனய்யா இந்த போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளார். விவசாயிகள் கே.ஆர்.எஸ் அணை முன்பு இரவு முழுவதும் கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து, காவிரி நீர் தொடர்பாக ஆலோசனை நடத்த துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் நாளை டெல்லி செல்ல இருக்கிறார்.