திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு


திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு
x
தினத்தந்தி 3 Oct 2023 7:29 AM GMT (Updated: 3 Oct 2023 7:35 AM GMT)

திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 2 வயது குழந்தையை 12 மணி நேரத்தில் போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பதி,

திருவண்ணாமலையைச் சேர்ந்த சந்திரசேகர், மீனா தம்பதி தங்களின் இரண்டு மகன்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர். நேற்றிரவு தரிசனத்தை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக மலை அடிவாரத்தில் உள்ள திருப்பதி பேருந்து நிலையத்தில் இரவு தங்கியுள்ளனர்.

நள்ளிரவு 2.20 மணியளவில்தன் 2 வயது குழந்தை அருள்முருகன் மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி உடனடியாக திருப்பதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு 2.10 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை தூக்கிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து 5 தனிப்படைகள் அமைத்து குழந்தையை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடத்தப்பட்ட குழந்தை அருள்முருகன் மாதவமலை பகுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர். அதையடுத்து அந்த இடத்திற்கு சென்ற திருப்பதி தனிப்படை போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை பார்த்த பெற்றோர் போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

மேலும் சுதாகர் என்பவர்தான் குழந்தையை கடத்திச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. சுதாகரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளி குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story