கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி பதவிகளில் இட ஒதுக்கீடு; டி.கே.சிவக்குமார் அறிவிப்பு


கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி பதவிகளில் இட ஒதுக்கீடு; டி.கே.சிவக்குமார் அறிவிப்பு
x

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

பல்வேறு குழுக்கள்

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சிந்தனை கூட்டம் நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது, மத்திய-மாநில அரசுகளின் தோல்விகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கட்சியை பலப்படுத்துவது குறித்து 2 நாட்கள் சிந்தனை ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளோம். கட்சியில் பல்வேறு குழுக்களை அமைத்துள்ளோம். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அரசு பணி நியமனங்களில் தவறுகள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அரசு பணி நியமனங்களும் தேர்வு முறையில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் முறைகேடுகள் நடைபெறுவது தடுக்கப்படும். இளைஞர்-விளையாட்டு கலாசார கொள்கையை அமல்படுத்துவோம்.

கட்சியில் இட ஒதுக்கீடு

கர்நாடகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க தயாராக உள்ளோம். கர்நாடக காங்கிரசில் கட்சி பதவிகளை வழங்குவதில் அனைத்து சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். கட்சியில் 50 சதவீத பதவிகள் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்.

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது உள்பட நீர்ப்பாசன திட்டங்களுக்கு 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்க திட்டமிட்டுள்ளோம். சட்டசபை தேர்தலுக்கு முன்பு கர்நாடகத்தில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். நரேகா திட்டத்தை போல் கர்நாடகத்தில் ஒரு வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story