மம்தாவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் நடக்கிறது - காங்கிரஸ் அறிவிப்பு


மம்தாவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் நடக்கிறது - காங்கிரஸ் அறிவிப்பு
x

மம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தை இன்னும் நடக்கிறது. இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்ட முடியவில்லை.

அங்கு காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 2 இடங்களை மட்டுமே ஒதுக்க திரிணாமுல் காங்கிரஸ் முன்வந்தது. இதை ஏற்க காங்கிரஸ் மறுத்து விட்டதால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

எனவே மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி அறிவித்து இருந்தார். இது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள போதும், அந்த கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் நடந்து வருவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "தொகுதி பங்கீடு தொடர்பாக மம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கதவுகள் இன்னும் அடைக்கப்படவில்லை. இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தொடங்கியது முதல் கடந்த 40 நாட்களாக இதை கூறி வருகிறேன்.

குறிப்பாக மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தை இன்னும் நடக்கிறது. இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. கதவுகளும் அடைக்கப்படவில்லை. அரசியலில் எந்த முடிவும் எடுப்பதற்கு 2 நாட்கள் கூட போதும்.

இதைப்போலத்தான் சமாஜ்வாடி விவகாரத்திலும் நாங்கள் கூறி வந்தோம். ஆனால் பலரும் எங்களை கேள்வி எழுப்பினர். ஆனால் தற்போது அங்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து இருக்கிறோம். இதைப்போல ஆம் ஆத்மியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் ஓரிரு நாட்களில் முடிக்கப்படும்.

மேற்கு வங்காளம், காஷ்மீரில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் தீவிரமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. மேலும் மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் சிவசேனா கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.


Next Story