நடத்தையில் சந்தேகம்: கழுத்தை இறுக்கி மனைவியை கொலை செய்த கணவன் - போலீசுக்கு பயந்து தப்பி ஓட்டம்


நடத்தையில் சந்தேகம்: கழுத்தை இறுக்கி மனைவியை கொலை செய்த கணவன் - போலீசுக்கு பயந்து தப்பி ஓட்டம்
x

கோப்புப்படம்

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது கணவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

விஜயநகர்,

விஜயநகர் மாவட்டம் ஹரப்பனஹள்ளி டவுன் வால்மிகி நகரை சேர்ந்தவர் சவுதப்பா (வயது 40). இவரது மனைவி நிங்கம்மா. இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். நிங்கம்மாவின் நடவடிக்கையில் அவரது கணவர் சவுதப்பாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் இடையே இதுதொடர்பாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. வேலை செய்யும் இடத்தில் நிங்கம்மாவுக்கு வேறு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி அவர் தனது மனைவியை அடித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நிங்கம்மா வேலை முடித்து வீட்டிற்கு வந்தார்.

அப்போது சவுதப்பா, கள்ளத்தொடர்பு குறித்து கேட்டு தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்தார். அப்போது அவர் தனது மனைவியை தாக்கினார். மேலும் வீட்டில் இருந்த கயிற்றை எடுத்து வந்து, தனது மனைவி நிங்கம்மாவின் கழுத்தை இறுக்கி உள்ளாா். இதில் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நிங்கம்மாவின் உடலை வீட்டின் ஒரு அறையில் அவர் தூக்கில் தொங்கவிட்டார். பின்னர் போலீசுக்கு பயந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் ஹரப்பனஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் விசாரணை நடத்தினர்.

அப்போது நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனது மனைவியை சவுதப்பா கழுத்தை இறுக்கி கொன்றது தெரிந்தது. சவுதப்பா மீது நிங்கம்மாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரை ஏற்ற போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது கணவரை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story