நாட்டில் பாஜக ஏன் வெறுப்பை பரப்புகிறது? இரண்டு விஷயங்களை கூற விரும்புகிறேன் - ராகுல்காந்தி
மக்கள் கவனத்தை திசை திருப்புவது பாஜகவின் வேலை.
ஜெய்ப்பூர்,
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக இடையே கடுமையான இருமுனைப் போட்டி நிலவி வருகின்றது. தேர்தலை முன்னிட்டு இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டின் 'எக்ஸ்ரே'. அதனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மிகவும் அவசியம்.பழங்குடியினரின் உரிமைகளை காங்கிரஸ் பாதுகாக்கும்.
பிரதமர் மோடி தன்னை ஓபிசி என்று கூறுகிறார். ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி நான் பேசும்போது, இந்தியாவில் ஒரே ஜாதிதான் இருக்கிறது. நாட்டில் ஏழைகள் மட்டுமே ஜாதி என்று மோடி கூறுகிறார். ஆனால் கோடீஸ்வரர்கள் என்று இன்னொரு ஜாதி இருக்கிறது. அதில் அம்பானி, அதானி உள்ளனர். மக்கள் கவனத்தை திசை திருப்புவது பாஜகவின் வேலை.
நாட்டில் பாஜக ஏன் வெறுப்பை பரப்புகிறது? நான் உங்களுக்கு இரண்டு விஷயங்களை கூற விரும்புகிறேன். வெறுப்பை பரப்ப காரணம் வேலையின்மை மற்றும் பணவீக்கம். இந்த இரண்டு விஷயங்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பாஜக வெறுப்பை பரப்புகிறது. எல்லாப் பணத்தையும் ஒரு சில கோடீஸ்வரர்களுக்கே கொடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதைப் பற்றி கேள்வி எழுப்பக்கூடாது என்று பாஜக விரும்புகிறது என்றார்.