சொத்தை எழுதி கொடுக்க மறுத்ததால் தாயை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மகன்


சொத்தை எழுதி கொடுக்க மறுத்ததால் தாயை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மகன்
x
தினத்தந்தி 4 March 2024 2:53 AM GMT (Updated: 4 March 2024 3:01 AM GMT)

ராஜேந்திரா தனது தாயிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தார்வார் நகர் ஒசஎல்லாப்புரா பகுதியை சேர்ந்தவர் சாரதா பஜந்திரி (வயது 60). இவரது மகன் ராஜேந்திரா (40). இவர் வேலைக்கு எங்கும் செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. சாரதாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சாரதாவும், ராஜேந்திராவும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

மேலும் சாரதாவுக்கு விதவை உதவித்தொகையும் கிடைத்துள்ளது. மேலும் அவரது பெயரில் சொத்துக்களும் இருப்பதாக தெரிகிறது. இதனால் ராஜேந்திரா தனது தாயிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். அத்துடன் சொத்தையும் தனது பெயருக்கு எழுதி கொடுக்க வேண்டும் என்றும் கூறி தகராறு செய்துள்ளார்.

ஆனால் சாரதா செலவுக்கு பணம் கொடுக்கவும், சொத்தை எழுதி கொடுக்கவும் மறுத்து வந்ததாக தெரிகிறது. இதேபோல் நேற்று முன்தினமும் சொத்து பிரச்சினை தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரா, வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தாய் என்று கூட பாராமல் சாரதாவை சரமாரியாக தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சாரதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என பயந்த ராஜேந்திரா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தார்வார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தார்வார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பணம் மற்றும் சொத்தை எழுதி கொடுக்க மறுத்ததால் தாய் சாரதாவை அடித்து கொலை செய்த ராஜேந்திரா, போலீசுக்கு பயந்து தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தார்வார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story