'தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும்...' ராஜஸ்தான் பாலைவனத்தில் எல்லையை பாதுகாக்கும் பெண்கள்


தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும்... ராஜஸ்தான் பாலைவனத்தில் எல்லையை பாதுகாக்கும் பெண்கள்
x

Image Courtesy : ANI

தினத்தந்தி 6 Jan 2024 10:26 AM GMT (Updated: 6 Jan 2024 10:44 AM GMT)

பாலைவனத்தின் கடுமையான வானிலையை எதிர்கொண்டு எல்லையை பாதுகாப்பது கடினமான பணியாகும்.

ஜெய்ப்பூர்,

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ரோந்து பணிகளை மேற்கொள்வது பெரும்பாலும் ஆண்களின் பணியாக உள்ளது. இருப்பினும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையைக் காக்கும் பணியில் எல்லை பாதுகாப்பு படையின் பெண்கள் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலைவனத்தின் கடுமையான வானிலையை எதிர்கொண்டு எல்லையை பாதுகாப்பது கடினமான பணியாகும். ஆனால் இந்த பெண்கள் குழுவினர் முழு அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் திறமையுடன் அந்த பணியை செய்கிறார்கள் என்று எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் உள்ள சிகார் பகுதியில் வசிக்கும் நான்சி தேவி ஜாட் என்ற கான்ஸ்டபிள், 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி ராணுவத்தில் சேர்ந்தார். தனது பெற்றோர்கள் தன்னை ஒரு எளிதான வேலையை செய்யுமாறு கூறியதாகவும், ஆனால் எல்லை பாதுகாப்பு படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இந்த பணியில் சேர்ந்ததாகவும் நான்சி தேவி ஜாட் கூறினார்.

இதே போல், உத்தரபிரதேசத்தின் எட்டாவா பகுதியைச் சேர்ந்த கான்ஸ்டபிள் அர்ச்சனா காஷ்யப் கூறுகையில், "எனது குடும்பத்தில் ராணுவத்தில் யாரும் இல்லை. சிறுவயதிலிருந்தே நான் தேசத்திற்கு சேவை செய்ய விரும்பினேன்," என்று தெரிவித்தார்.

இந்த எல்லைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தாங்கள் எதிர்கொண்ட முக்கிய சவால், தீவிர வானிலையே என்று இந்த பெண்கள் கூறுகின்றனர். கோடைக்காலத்தில் மணல் புயல்கள் வரும்போது இந்த பணி மிகவும் கடினமாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் அவர்கள் ஒட்டகத்தின் மீது ரோந்து செல்கிறார்கள். இவர்களுக்கான பணிகள் இரவு ரோந்து பணி உள்பட நான்கு ஷிப்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கடமையில் இருக்கும்போது தேசத்தின் பாதுகாப்புதான் முக்கியம் என்பதால், மற்ற பிரச்சினைகள் முக்கியமில்லை என்று கான்ஸ்டபிள் அர்ச்சனா காஷ்யப் கூறினார்.


Next Story