உத்தர பிரதேசம்: வன்முறையில் ஈடுபட்ட நபர்களின் வீடுகள் ஜே.சி.பி. வாகனம் மூலம் இடிப்பு


உத்தர பிரதேசம்: வன்முறையில் ஈடுபட்ட நபர்களின் வீடுகள் ஜே.சி.பி. வாகனம் மூலம் இடிப்பு
x

சட்டவிரோத கட்டுமானம் இருந்ததாகக் கூறி, வன்முறையில் ஈடுபட்ட நபர்களின் வீடுகளை ஜே.சி.பி. வாகனம் மூலம் போலீசார் இடித்தனர்.

லக்னோ,

நபிகள் நாயகம் பற்றி பா.ஜனதா செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள், சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இந்நிலையில், அவர்களை கைது செய்யக்கோரி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோ, பிரக்யாராஜ், மொரதாபாத், சகாரன்பூர், ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன. இதில் கடந்த வெள்ளிக்கிழமை மொரதாபாத், பிரக்யாராஜ் ஆகிய இடங்களில் நடந்த போராட்டத்தின் போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.

இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக உத்தர பிரதேச போலீசார் இதுவரை சுமார் 300 பேரை கைது செய்துள்ளனர். மேலும் வன்முறையில் ஈடுபட்ட 2 நபர்களின் வீடுகளில் சட்டவிரோத கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகக் கூறி, அவர்களது வீடுகளை நேற்றைய தினம் போலீசார் ஜே.சி.பி. வாகனங்கள் மூலம் இடித்து தள்ளினர். அதைத் தொடர்ந்து இன்றும் பிரயாக்ராஜ் பகுதியில் வீட்டை இடிக்கும் பணியை போலீசார் தொடர்ந்தனர்.

வெள்ளிக்கிழமை நடந்த வன்முறை சம்பவத்தின் மூளையாக செயல்பட்டதாக ஜாவேத் முகமது என்ற நபரின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், பிரயாக்ராஜில் உள்ள அந்த நபரின் வீடு ஜே.சி.பி. வாகனம் மூலம் இடிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ஜாவித் முகமதின் வீட்டில் சட்டவிரோதமாக கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கடந்த மே மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிவித்தனர்.

வீட்டை இடிப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று இரவு ஜாவித் வீட்டின் முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்றைய தினம் ஜே.சி.பி. வாகனத்தின் உதவியுடன் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் வீட்டை இடித்தனர்.


Next Story