"ரஷியாவுக்கு எதிரான ஐ.நா. சபையின் தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காதது ஏன்?" - மத்திய அரசு விளக்கம்
“ரஷியாவுக்கு எதிரான ஐ.நா. சபையின் தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காதது ஏன்?” என்பது குறித்து மத்திய மந்திரி வி.முரளீதரன் விளக்கமளித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், மதிமுக பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான வைகோ, "ரஷியாவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் விசாரணை நடத்தும் தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களித்ததா?
இல்லையெனில் வாக்களிப்பதில் இருந்து விலகுவதற்கு இந்தியா தேர்ந்தெடுத்ததற்கு காரணங்கள் என்ன? ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதியை ஏற்படுத்தவும் தூதரக முயற்சிகள் எடுக்கப்பட்டதா?" என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு வெளியுறவுத் துறை இணை மந்திரி வி.முரளீதரன் அளித்த பதில்;-
"ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 49-வது அமர்வு, மார்ச் 2022-ல் நடைபெற்றது. அதில், ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தை அவசரமாக நிறுவுவதற்கு வாக்கெடுப்பு மூலம் ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல்கள், தொடர்புடைய குற்றங்கள், துஷ்பிரயோகங்களின் உண்மைகள், சூழ்நிலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான மூல காரணங்கள் குறிப்பாக தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவந்து அதை உறுதிப்படுத்துதல் அடங்கிய தீர்மானம்.
எங்கள் கொள்கையின் பார்வையிலும், ராஜதந்திர நடவடிக்கை மற்றும் அங்கு நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும் இந்தியா தீர்மானத்தில் வாக்களிக்கவில்லை.
உக்ரைனில் மோதல்கள் தொடங்கியதில் இருந்தே, உடனடியாக சண்டை நிறுத்தம், வன்முறையை நிறுத்தம் வேண்டும் என்றும் இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. உக்ரைன் பிரதமர் மற்றும் ரஷியாவின் அதிபருடன் பலமுறை பேசி, இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவித்து உள்ளது.
பேச்சுவார்த்தையின் மூலம் சமாதான பாதைக்குத் திரும்புமாறு இரு தரப்பினருக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. மேலும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து ராஜதந்திர முயற்சிகளுக்கும் இந்தியா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கும் இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது."
இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.