சரத்பவார் ராஜினாமா முடிவுக்கு காரணம் என்ன?- சுப்ரியா சுலே பகீர் தகவல்


சரத்பவார் ராஜினாமா முடிவுக்கு காரணம் என்ன?- சுப்ரியா சுலே பகீர் தகவல்
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:47 PM GMT)

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த மே மாதம் ராஜினாமா முடிவு எடுத்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றி பகீர் தகவலை சுப்ரியா சுலே கூறியுள்ளார்.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த மே மாதம் ராஜினாமா முடிவு எடுத்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றி பகீர் தகவலை சுப்ரியா சுலே கூறியுள்ளார்.

ராஜினாமா முடிவு

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த மே மாதம் தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் கட்சியினர் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அவர் தனது முடிவில் இருந்து பின்வாங்கினார்.

இது குறித்து கட்சியின் செயல் தலைவரும், சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சுலே எம்.பி. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய எனது தந்தை ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால் கட்சியில் உள்ள சிலர் பா.ஜனதாவுடன் கைகோர்க்க வலியுறுத்தியதால் சரத்பவார் மனம் புண்பட்டார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஊடகத்தினர் இதனை நாடகம் என்று நினைத்தார்கள். ஆனால் எங்களுக்கு அது நிஜம், பின்னர் கட்சி தொண்டர்களின் வலியுறுத்தல் அவரது முடிவை மாற்றியது.

சர்வாதிகாரி அல்ல

சரத்பவார் அந்த சமயத்தில் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதை முடிவுசெய்ய குழு அமைக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் நீங்கள் அவரை சர்வாதிகாரி என்று கூறுகிறீர்கள்.

அவர் சர்வாதிகாரியாக இருந்திருதால் குறிப்பிட்ட நபரை கட்சியின் அடுத்த தலைவராக்க உத்தரவிட்டு இருப்பார். ஜூலை 2-ந் தேதி அஜித்பவார் மற்றும் 8 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. பா.ஜனதா- சிவசேனா கூட்டணியில் இணைவது குறித்து அஜித்பவாரின் முடிவு திரைமறைவில் எடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

அலட்சியமான உள்துறை மந்திரி

மேலும் புனே சாசூன் பொது மருத்துவமனையில் போதைப்பொருள் கடத்தல் நடப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "தேவேந்திர பட்னாவிஸ் உள்துறை மந்திரியாக இருக்கும்போதெல்லாம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அவரிடம் ராஜினாமாவை கேட்டு நான் சோர்ந்து போய்விட்டேன். அவர் ஒரு அலட்சியமான உள்துறை மந்திரியாக செயல்படுகிறார்.

அவர் குடும்பங்களையும், கட்சிகளையும் உடைப்பதில் மிகவும் மும்முரமாக இருக்கிறார். அதனால் அவருடைய வேலையை செய்ய அவருக்கு நேரம் இல்லை" என்றார்.


Next Story