உலக நன்மைக்காக ராஜா அண்ணாமலைபுரம் அய்யப்பன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்


உலக நன்மைக்காக ராஜா அண்ணாமலைபுரம் அய்யப்பன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
x

உலக நன்மைக்காக ராஜா அண்ணாமலைபுரம் அய்யப்பன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை

அடையாறு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் உலக நன்மைக்காக 1,008 சங்காபிஷேகம் சிறப்பு பூஜை நேற்று நடந்தது. முன்னதாக அய்யப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சங்காபிஷேக பூஜைக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு பந்தலில் 1,008 சங்குகளில் புனித நீா் நிரப்பப்பட்டு, பூக்கள் தூவப்பட்டு இருந்தது. அருகில் யாகம் வளர்க்கப்பட்டதுடன், சாமி எழுந்தருள செய்யப்பட்டு, கலச பூஜையும் நடந்தது. காலை 8 மணியிலிருந்து 10 மணி வரை வைரமணி, ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் கோவில் வளாகத்தில் புனித நீர் நிரப்பப்பட்ட சங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து ஒவ்வொரு சங்குகளாக மூலஸ்தானத்துக்கு எடுத்து சென்று அய்யப்பா சாமிக்கு சங்குகளில் உள்ள தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜையை முன்னிட்டு வீரமணி கண்ணனின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. பூஜையில் ஸ்பிக் நிறுவன தலைவர் ஏ.சி.முத்தையா- தேவகி முத்தையா கலந்துகொண்டனர்.

திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சங்காபிஷேகத்துக்காக சமீபத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புதிய சங்குகள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. சிறப்பு பூஜை ஏற்பாடுகளை கோவில் மேலாளர் சோமசுந்தரம் உள்பட பலர் செய்து இருந்தனர்.


Next Story