மகளிர் காங்கிரஸ் பிரமுகர் மீதான வழக்கை 4 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்; போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


மகளிர் காங்கிரஸ் பிரமுகர் மீதான வழக்கை 4 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்; போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 Jun 2017 1:08 AM IST (Updated: 7 Jun 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் காங்கிரஸ் பிரமுகர் மீதான வழக்கை 4 வாரத்துக்குள் விசாரித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும் என்று குமரன் நகர் போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருப்பவர் டி.செல்விபிரபு. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

போலீசில் புகார்

என்னுடைய முகநூல் பக்கத்தில் மகளிர் காங்கிரஸ் பிரமுகரான ஹசீனா சையது என்பவர் நண்பரானார். இவர் மூலம் சையது முகமது, நவாஷ் சாகுல் உள்ளிட்டோர் முகநூலில் நண்பர்கள் ஆனார்கள். இதன்பின்னர், அவர்கள் முகநூலில் ஆபாச வீடியோ காட்சிகள் பதிவு செய்தனர். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை செய்தேன்.

இதையடுத்து முகநூலில் என்னை அவதூறாக சித்தரித்து பதிவிட்டனர். இதுகுறித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 27–ந் தேதி குமரன் நகர் போலீசார் விசாரித்தனர். அப்போது, போலீசார் முன்னிலையில், ஹசீனா சையது, அவரது சகோதரர் உமர் ஆகியோர் மிரட்டினர்.

விசாரிக்க வேண்டும்

பின்னர் போலீஸ் நிலையம் முன்பு, என்னுடைய சாதியை குறிப்பிட்டும் அசிங்கமாக திட்டினர். இதுகுறித்து குமரன் நகர் போலீசில் புகார் செய்தேன். போலீசார், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின்னர் எந்த விசாரணையும் செய்யாமல், வழக்கை கிடப்பில் போட்டுவிட்டனர். எனவே, இந்த வழக்கை விரைவாக விசாரிக்க குமரன் நகர் போலீசாருக்கு உத்தரவிடவேண்டும்.  இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ‘மனுதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்த எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை வழக்கை, குமரன் நகர் போலீசார் 4 வாரங்களுக்குள் விசாரித்து குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.


Next Story