‘காலா’ படத்துக்கு தடை கோரி வழக்கு: நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் பதில் மனுதாக்கல்


‘காலா’ படத்துக்கு தடை கோரி வழக்கு:  நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் பதில் மனுதாக்கல்
x
தினத்தந்தி 20 July 2017 10:15 PM GMT (Updated: 20 July 2017 9:12 PM GMT)

‘காலா’ படத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

சென்னை,

இந்த வழக்கு விசாரணை 26–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

சென்னை காரம்பாக்கத்தை சேர்ந்த ஜி.எஸ்.ஆர். விண்மீன் கிரியே‌ஷன்ஸ் உரிமையாளரான கே.ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா, சென்னை பெருநகர 6–வது உதவி உரிமையியல் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா என்ற கரிகாலன்’ படத்தின் தலைப்பு, கதையின் மூலக்கரு அனைத்தும் எனது உருவாக்கம் ஆகும். அதை நடிகர் தனுஷ், இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் திருடி அதற்கு மறுவடிவம் கொடுத்து ‘காலா என்ற கரிகாலன்’ படத்தை எடுத்து வருகின்றனர். எனவே, ‘காலா’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ரஞ்சித், ‘காலா’ படத்தை தயாரித்து வரும் ஒண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று அந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினோத்குமார் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ஒண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம், ரஜினிகாந்த், ரஞ்சித் ஆகியோருக்காக இந்த பதில் மனுவை தாக்கல் செய்வதாக கூறி உள்ளார். பதில் மனுவில் கூறி இருப்பதாவது:–

‘காலா’ படத்தின் கதையை யாரிடம் இருந்தும் திருடவில்லை. மனுதாரர், ‘கரிகாலன்’ என்ற பெயரில் தனது கதையை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளார். ஒரு படத்தின் கதையை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலோ அல்லது தமிழ்நாடு படத்தயாரிப்பாளர்கள் சங்கத்திலோ பதிவு செய்திருந்தால் ஒரு ஆண்டுக்குள் அந்த தலைப்பில் படம் எடுக்க வேண்டும்.

அவ்வாறு முடியாவிட்டால் அந்த படத்தின் தலைப்பை பதிவு செய்ததை புதுப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் படத்தின் தலைப்பு தானாகவே காலாவதியாகி விடும். ‘கரிகாலன்’ என்ற தலைப்பை மனுதாரர் 1996–ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளார். 2006–ம் ஆண்டுக்கு பின்பு ‘கரிகாலன்’ என்ற தலைப்பின் பதிவை மனுதாரர் புதுப்பிக்கவில்லை.

எனவே, இந்த வழக்கை தொடர மனுதாரருக்கு எந்த உரிமையும் இல்லை. ரஜினிகாந்தை 1991–1992–ம் ஆண்டில் சந்தித்து ‘கரிகாலன்’ படத்தின் கதையை தெரிவித்ததாக மனுதாரர் கூறி உள்ளார். நடிகர் ரஜினிகாந்தை ஏராளமானோர் சந்தித்து வருகின்றனர். அனைவரையும் ஞாபகம் வைத்துக்கொள்வது என்பது இயலாத காரியம்.

ரூ.160 கோடியில் எடுக்கப்பட்டு வரும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். பிரபலமான நடிகர்கள் நடிக்கும் படத்துக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தால் பிரபலம் ஆகலாம் என்ற விளம்பர நோக்கத்திலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு அபராதம் விதித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  இந்த மனு மீதான விசாரணையை 26–ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


Next Story