ப.சிதம்பரத்துக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு
வருமான வரி கணக்கை மறுஆய்வு செய்ய ப.சிதம்பரத்துக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு அளித்துள்ளது.
சென்னை,
2010–2011–ம் ஆண்டு தாக்கல் செய்த வருமான வரி கணக்கை மறுஆய்வு செய்யவேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்துக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
மத்திய மந்திரியாக பதவி வகித்த ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 2009–2010–ம் ஆண்டு தாக்கல் செய்த வருமான வரிக்கணக்கு விவரங்களை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு கடந்த ஆண்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசை எதிர்த்து ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி டி.எஸ்.சிவஞானம், வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கடந்த 2010–2011–ம் ஆண்டு ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த வருமான வரிக்கணக்கை மறுஆய்வு செய்யவேண்டும் என்று மற்றொரு நோட்டீசை வருமான வரித்துறை உதவி ஆணையர் அனுப்பியிருந்தார்.
இந்த நோட்டீசை எதிர்த்து ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீண்டும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள எஸ்டேட்டில் விளையும் காபிக்கொட்டை, மிளகு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் எங்களுக்கு வருமானம் கிடைத்தது. விவசாய பொருட்கள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரிச்சலுகை உண்டு. அந்த சலுகையை நாங்கள் பெற்றுள்ளோம். ஆனால், 2010–2011–ம் ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கில் இதுகுறித்து மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மற்றொரு நோட்டீசை வருமான வரித்துறை அனுப்பியுள்ளனர். இந்த நோட்டீசை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதித்தார். இந்த மனுவுக்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.