தி.மு.க. அரசு மக்களுக்கு பணியாற்றும் அரசாக என்றைக்கும் இருக்கும்: மு.க.ஸ்டாலின்


தி.மு.க. அரசு மக்களுக்கு பணியாற்றும் அரசாக என்றைக்கும் இருக்கும்: மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 27 Sep 2021 5:38 PM GMT (Updated: 27 Sep 2021 5:38 PM GMT)

தி.மு.க. அரசு மக்களுக்கு பணியாற்றும் அரசாக என்றைக்கும் இருக்கும் என்று சென்னையில் நடந்த தென்னிந்திய திருச்சபை பவள விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பவள விழா
சென்னை ராயப்பேட்டையில் தென்னிந்திய திருச்சபையின் 75-வது ஆண்டு பவள விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அரிய கருவூலம்
75-ம் ஆண்டில் நுழையும் பாரம்பரியமும், பழமையும் மிக்க தென்னிந்திய திருச்சபைக்கு என்னுடைய இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ‘திறந்த உலகில் சிறந்த திருச்சபை அனைவரும் சேர்ந்து எதிர்நோக்குவோம்' என்ற பொருளில் கொண்டாடப்படுகின்ற இந்த தென்னிந்திய திருச்சபையின் பவள விழாவை தொடங்கி வைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாடு முழுக்க கல்வி நிறுவனங்களையும், ஆஸ்பத்திரிகளையும் உருவாக்கி “அனைவருக்கும் கல்வி மற்றும் மருத்துவம்” என்ற லட்சிய பாதையில் வெற்றிப்பயணம் செய்து கொண்டிருக்கக்கூடிய இந்த திருச்சபை தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த அரிய கருவூலம்.

சமுதாயப்பணியை ஒரு இயக்கமாகவே தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்து வரக்கூடிய இந்த திருச்சபையின் பணிகளுக்கு என்னுடைய சார்பில் குறிப்பாக, தமிழக அரசின் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இந்தியாவின் மத நல்லிணக்கத்துக்கும், மதச்சார்பின்மைக்கும் ஏற்ற சாதி, சமயமற்ற நல்வாழ்விற்காக தென்னிந்திய திருச்சபை இதுவரை ஆற்றியுள்ள ஆக்கப்பூர்வமான பணிகளை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். தென்னிந்திய திருச்சபை இன்னும் பல நூறு ஆண்டு காலம் கம்பீரமாக தனது வெற்றிப்பயணத்தை தொடர்ந்திட முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் அமோக வெற்றி காணவும் முழு மனதோடு வாழ்த்துகிறேன்.

வாக்குறுதி
தமிழகத்திலே நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய அரசு உங்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய அரசு. நான் பலமுறை அடிக்கடி எடுத்து சொல்லி கொண்டிருப்பது, நான் எனது அரசு என்று சொல்லமாட்டேன் அல்லது எங்களுடைய அரசு என்று கூறமாட்டேன். இது நம்முடைய அரசு. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறபோது பெரும்பான்மை இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றுக்கொண்டிருக்கிறது என்ற செய்தி வந்தபோது, “அமையவிருக்கக்கூடிய ஆட்சி மக்களுக்கு பணியாற்றக்கூடிய ஆட்சியாக அமையும், வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து என்னுடைய பணி அமையும்” என்று கூறினேன்.

வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய வகையிலே, வாக்களிக்க தவறியவர்கள், இந்த ஆட்சிக்கு நாம் வாக்களிக்காமல் இருந்துவிட்டோமோ என்று வருந்தக்கூடிய அளவில் ஆட்சி அமையும் என்று நான் சொல்லியிருக்கிறேன். தேர்தல் நேரத்திலே போட்டியிடக்கூடிய கட்சிகளெல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பொறுப்புக்கு வந்தால் என்னென்ன செய்யப்போகிறோம் என்பதை வாக்குறுதிகளாக வழங்குவது வழக்கம். ஆனால், தி.மு.க.வை பொறுத்த வரையிலே, சொன்னதைத்தான் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம் என்ற அடிப்படையிலே வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டிருக்கிறோம்.

மக்களுக்கு பணியாற்றும் அரசு
குறிப்பாக, நடந்து முடிந்த பொதுத்தேர்தலை பொறுத்தவரைக்கும் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கினோம். அந்த 500-க்கு மேற்பட்ட வாக்குறுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று கம்பீரமாக இந்த நேரத்தில் சொல்லுகிறோம். ஆகவே, மக்களுக்கு பணியாற்றுகிற அரசாக, உங்களால் உருவாக்கி தரப்பட்டிருக்கக்கூடிய அரசாக இந்த அரசு என்றைக்கும் இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கனிமொழி எம்.பி.

விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, கீதா ஜீவன், கனிமொழி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், டாக்டர் எழிலன் நாகநாதன், பேராயர்கள் தர்மராஜ் ரசாலம், சி.பெர்னான்டஸ் ரத்தின ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story