தமிழகம் முழுவதும் 25 பசுமை பள்ளிகள்


தமிழகம் முழுவதும் 25 பசுமை பள்ளிகள்
x

இயற்கையை பாதுகாப்பதில் தமிழகம் முன்னோடியாக திகழும் எனவும், தமிழகம் முழுவதும் 25 பசுமை பள்ளிகள் உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் மெய்யநாதன் தொிவித்தார்.

புதுக்கோட்டை

பயிலரங்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலநிலை மாற்றம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பயிலரங்கம் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் இன்று நடைபெற்றது. இந்த பயிலரங்கத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், பயிலரங்கத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் பயனாளிகளுக்கு சுழற்சி நிதி கடனுதவி தொகைக்கான காசோலைகளையும் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு சிறப்பாக பங்களித்தவர்களுக்கு நிதியுதவி தொகைக்கான காசோலைகளையும், பசுமை சாம்பியன் விருதுகளையும் வழங்கி, மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினையும் அவர் தொடங்கி வைத்தார். பயிலரங்கத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:- இந்தியாவில் அதிக நீளமான கடற்கரை பகுதியை கொண்ட மாநிலம் தமிழகம்.

குப்பை கிடங்கு

உலக வெப்பமயமாதலில் அதிகமாக பாதிப்படையக்கூடிய இடம் கடற்கரை பகுதி தான். இதனால் கடற்கரை பகுதிகளை பாதுகாக்க பனை மரங்களை நடுதல், அலையாத்தி காடுகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் 243 குப்பை கிடங்குகளை பயோமைனிங் முறையில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டையில் குப்பை கிடங்கில் குப்பை அகற்றும் பணி 6 மாதம் அல்லது 1 ஆண்டுக்குள் முடிவடையும். பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவு நீர் தெற்கு வெள்ளாறில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் அதிகமாக கலப்பதை தடுக்க மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் சேகரிப்பு இயக்கம் நடத்தப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் சேகரிப்பு நடத்தப்படும். தெற்கு வெள்ளாற்றில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும். தைல மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பசுமை பள்ளிகள்

தமிழகம் முழுவதும் 25 பசுமை பள்ளிகள் உருவாக்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி, கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வெண்ணாவல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 அரசு பள்ளிகள் தேர்வாகி உள்ளது.

இப்பள்ளிகளில் பசுமையினை ஏற்படுத்தும் வகையில் மரங்களை நடுதல், சூரிய ஒளி மின்சாரம், பிளாஸ்டிக் பயன்பாடில்லா வளாகம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. 2030-ம் ஆண்டுக்குள் வெப்பமயமாதல் அளவு உயராமல் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

இயற்கையை பாதுகாக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரையும் மருத்துவர்களாக பார்க்கிறேன். உங்களது பணியை பாராட்டி மாநிலம் முழுவதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அழைத்து மாநாடு நடத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டும் நிகழ்வு நடத்தப்பட உள்ளது. இயற்கையை பாதுகாக்க தமிழகம் முன்னோடியாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு காலநிலை மாற்றத்தின் தலைமை இயக்குனர் தீபக் எஸ் பில்கீ, உலக வள நிறுவனத்தின் இயக்குனர் நம்பி அப்பாதுரை, மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story