செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்- அமைச்சரின் 2-ம் கட்ட காலை உணவு திட்டம் - கலெக்டர் தொடங்கிவைத்தார்


செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்- அமைச்சரின் 2-ம் கட்ட காலை உணவு திட்டம் - கலெக்டர் தொடங்கிவைத்தார்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்- அமைச்சரின் 2-ம் கட்ட காலை உணவு திட்டத்தை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 7.5.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி எண்.110-ன் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அரசுபள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும், படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், ஊட்டச்சத்து நிலையை உயர்த்தவும், பள்ளிகளில்மாணவ- மாணவிகளின் வருகையை அதிகரிக்கவும், தக்க வைக்கவும், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும். அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் 5 நாட்களிலும் வெவ்வேறு வகையான சத்தான சிற்றுண்டி (உப்புமா, கிச்சடி, வெண்பொங்கல்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 15.9.2022 அன்று இந்த திட்டம் மதுரை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு 16.9.2022 அன்று முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட 4 அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 972 மாணவர்கள் மற்றும் மறைமலை நகர் நகராட்சிக்குட்பட்ட 14 அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 2 ஆயிரத்து 85 மாணவர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 57 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊரக பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் 5 நாட்களிலும் வெவ்வேறு வகையான சத்தான சிற்றுண்டி வழங்கிட ஆணையிடப்பட்டதை தொடர்ந்து, இந்த திட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் முதல்-அமைச்சரின் 2-ம் கட்ட காலை உணவு விரிவாக்கத் திட்டத்தினை தொடங்கி வைக்கப்பட்ட அதே நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட ஊரக, ஊரக பகுதியை ஒட்டிய பேரூராட்சியில் அடங்கிய 611 பள்ளிகளிலும், செங்கல்பட்டு நகராட்சியில் 4 பள்ளிகளிலும் மற்றும் மதுராந்தகம் நகராட்சியில் 7 பள்ளிகளிலும், தாம்பரம் மாநகராட்சியில் 28 பள்ளிகளிலும், சென்னை பெருநகர மாநகராட்சியை ஒட்டியுள்ள 33 பள்ளிகளிலும் மொத்தம் 683 பள்ளிகளில் பயிலும் 54,431 மாணவ, மாணவியர்கள் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டம் வாயிலாக பயனடைவார்கள்.

இதில் ஊரக, ஊரக பகுதியை ஒட்டிய பேரூராட்சியில் அடங்கிய 611 பள்ளிகளில் உள்ள சமையற்கூடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சமையல் பொறுப்பாளர், சுயஉதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு சமைத்து மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும்.

மேலும், செங்கல்பட்டு, மதுராந்தகம் நகராட்சிகள் மற்றும் தாம்பரம் மாநகராட்சியை சேர்ந்த 39 பள்ளிகளிலும் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சியினை ஒட்டியுள்ள 33 பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்களில் காலை சிற்றுண்டி சமைக்கப்பட்டு வாகனங்கள் வாயிலாக அந்தந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும்.

தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட சட்டமன்ற தொகுதியில், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், தலைமையில் வெண்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், மாவட்ட வருவாய் அலுவலர்.சுபா நந்தினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இந்து பாலா, மகளிர் திட்ட இயக்குநர் மணி, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழுத்தலைவர் உதயா கருணாகரன், ஆலப்பாக்கம் ஊராட்சி தலைவர், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story