காரை ஏற்றி போலீஸ்காரரை கொன்ற வழக்கில் 4 பேர் கைது


காரை ஏற்றி போலீஸ்காரரை கொன்ற வழக்கில் 4 பேர் கைது
x

செய்யூர் அருகே காரை ஏற்றி போலீஸ்காரரை கொன்ற வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த வடக்கு செய்யூர் பகுதியை சேர்ந்தவர் காமேஷ்குமார் (வயது 37). இவர், சென்னையை அடுத்த நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு செய்யூர் பகுதியில் விளை நிலங்கள் உள்ளன.

நேற்று முன்தினம் காமேஷ்குமார், தனது விளை நிலத்தை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனில் அழைப்பு வர, சால்ட் ரோடு பகுதியில் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர் திசையில் காரில் வந்த காமேஷ்குமாரின் அக்காள் கணவரான மதன்பிரபு மற்றும் அவரது நண்பர்கள் சாலையோரம் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்த காமேஷ்குமார் மீது காரை ஏற்றி கொலை செய்தனர்.

இது குறித்து செய்யூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு துரை பாண்டியன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸ்காரர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வடக்கு செய்யூரை சேர்ந்த தாமோதரன் (35), பிரசாத் (32), பார்த்திபன் (32), பரசுராமன்(35) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளியான காமேஷ்குமாரின் அக்காள் கணவர் மதன் பிரபு தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே செய்யூரில் காமேஷ்குமாரின் உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். செய்யூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

1 More update

Next Story