சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேசன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது
சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 4 டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையான பாலகிருஷ்ணாபுரம் சந்திப்பில் நேற்று அதிகாலை ஆந்திரா நோக்கி செல்ல முயன்ற மினி வேன் ஒன்று பழுதாகி நின்றுக்கொண்டிருந்தது. அந்த வழியாக ரோந்து சென்ற இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையிலான கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அந்த லோடு வேனை சோதனை செய்தனர்.
அப்போது அந்த வேனில் தலா 50 கிலோ எடைகொண்ட 80 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இவற்றின் மொத்த எடை 4 டன் ஆகும். சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் தடாவிற்கு கடத்த முயன்ற இந்த ரேஷன் அரிசி மூட்டைகளில், சீல் பிரிக்காத நிலையில் அப்படியே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரேசன் அரிசியை கடத்த முயன்ற தண்டையார்பேட்டையை சேர்ந்த வேன் டிரைவர் ஜோசப் (வயது 34), லோடு மேன் அஜீத்குமார் (21) ஆகிய 2 பேரை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் கைது செய்து அவர்களை மேல் விசாரணைக்காக மாவட்ட குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் மினி லோடு வேனுடன், பறிமுதல் செய்யப்பட்ட 4 டன் ரேசன் அரிசியையும் அவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.