2-ம் அரையாண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை 15-ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை - சென்னை மாநகராட்சி அறிவிப்பு


2-ம் அரையாண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை 15-ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
x

சென்னை மாநகராட்சிக்கு 2-ம் அரையாண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை வருகிற 15-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத் தொகையை பெற்றுக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை

சொத்துவரி செலுத்த வேண்டிய ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, அவர்கள் செலுத்தும் சொத்து வரியில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சொத்து உரிமையாளர்கள் 2022-23-ம் ஆண்டிற்கான தங்களின் 2-ம் அரையாண்டு சொத்து வரியினை கடந்த 1-ந் தேதி முதல் செலுத்த வேண்டும்.

அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரையிலான 10 தினங்களில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 13 லட்சம் சொத்து உரிமையாளர்களில் சுமார் 4 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து, 2-ம் அரையாண்டிற்கான சொத்துவரி ரூ.50.16 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை சொத்துவரி செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு ரூ.1.25 கோடி, ஊக்கத்தொகையாக அளிக்கப்பட்டுள்ளது.

சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியினை கீழ்க்கண்ட முறைகளில் ஏதேனும் ஒரு வழிமுறையின் மூலம் செலுத்தலாம்.

1. சென்னை மாநகராட்சியின் வருவாய் அலுவலர், பெயரில் காசோலைகள் மற்றும் வரைவோலைகள், கடன், பற்று அட்டை மூலமாக பெருநகர சென்னை மாநகராட்சியின் வரி வசூலிப்பவர்களிடம் செலுத்தி, செலுத்தப்பட்டதற்கான வரி ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.

2. பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்படும் சொத்துவரி ரசீதுகளில் உள்ள கியூ.ஆர் கோடை பயன்படுத்தி சொத்துவரியினை செலுத்தலாம்.

3. பெருநகர சென்னை மாநகராட்சியின் வலைதளம்மூலமாக, எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமல் சொத்துவரி செலுத்தலாம்.

4.தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் மூலம் நேரடியாக பணமாகவும் சொத்துவரியினை செலுத்தலாம்.

5. 'நம்ம சென்னை' மற்றும் 'பே.டி.எம்.' முதலிய கைபேசி செயலி மூலமாகவும் செலுத்தலாம். 'பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்' (பி.பி.பி.எஸ்.) மூலமாகவும் சொத்துவரி செலுத்தலாம். 2022-23-ம் நிதியாண்டின் 2-ம் அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை சலுகை வழங்கப்பட்டு வருகிறது. சொத்துவரியில் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற இன்றுடன் 4 தினங்களே உள்ளது.

எனவே, சொத்து உரிமையாளர்கள் வருகிற 15-ந் தேதிக்குள் தங்களின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகையினை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story