ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக பெண் என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி - வாலிபர் கைது


ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக பெண் என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி - வாலிபர் கைது
x

சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண் என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 46-வது தெருவைச் சேர்ந்தவர் பவித்ரா (வயது 26). என்ஜினீயரிங் பட்டதாரி. இவருடைய தம்பி லட்சுமணன் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த சபேஷ் (25) என்பவர் பவித்ராவுக்கு அறிமுகமானார். அவர் தான் சென்னை ஐகோர்ட்டில் வேலை செய்வதாக அடையாள அட்டையை காண்பித்தார். இதனால் அவருடன் பவித்ரா நட்பாக பழகினார்.அப்போது பவித்ராவிடம் அவர், "சென்னை ஐகோர்ட்டில் உள்ள நீதிபதிகள், உயர் அதிகாரிகள் எனக்கு நன்றாக தெரியும். அவர்கள் மூலம் உங்களுக்கு சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருகிறேன்" என ஆசை வார்த்தை கூறினார்.

மேலும் அதற்காக ரூ.7 லட்சம் செலவாகும் எனவும் கூறினார். இதை நம்பிய பவித்ரா, சபேசிடம் ரூ.7 லட்சத்தை கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர், ஒரு போலியான பணி நியமன ஆணையை அவருக்கு வழங்கினார்.

பவித்ரா, அந்த பணி நியமன ஆணையை பரிசோதித்து பார்த்தபோது அது போலி என்பதை கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டார். ஆனால் பணத்தை தர மறுத்த சபேஷ், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த மோசடி குறித்து பவித்ரா அளித்த புகாரின் பேரில் சென்னை வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இவர் எத்தனை பேரை இதுபோல் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி உள்ளார்? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story