தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் நாளை (திங்கட்கிழமை) அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
நாளைய போராட்டத்தோடு நிச்சயமாக இது நின்றுவிடப்போவதில்லை. தமிழ்நாட்டில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். பெற்றோர்களே- இந்த தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது.
நம் பிள்ளைகளை நாம் தான் பார்த்துக் கொள்ளவேண்டும். கவனமாக இருங்கள். மாணவச் செல்வங்களே, இளைய சமுதாயமே- உங்கள் எதிர்காலம் மிக முக்கியம். ஒரு சிறிய தவறு கூட பெரிய தண்டனைகளை பெற்றுத் தந்துவிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.