அ.தி.மு.க. கூட்டணியில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்கப்போவதில்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


அ.தி.மு.க. கூட்டணியில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்கப்போவதில்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
x

2024 நாடாளுமன்ற தேர்தலின்போது, அ.தி.மு.க. கூட்டணியில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்கப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

அ.தி.மு.க. கூட்டணியில் சேர்க்கப்போவதில்லை

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வுக்கும், சசிகலாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஒன்றிணைக்கும் பணியை சசிகலா செய்யலாமே தவிர, ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழக்கூடாது. எங்கள் கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி எழுச்சியோடு சென்று கொண்டிருக்கும் நிலையில் சசிகலாவின் கருத்தை யாரும் ஏற்க மாட்டார்கள்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறிவிட்டார். எங்கள் கூட்டணியில் நாங்கள் ஒதுக்கும் இடம்தான் மற்றவர்களுக்கு. எங்களை யாரும் (பா.ஜ.க.) வற்புறுத்த முடியாது. கட்டாயப்படுத்த முடியாது. கூட்டணியில் டி.டி.வி.தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை எந்த நிலையிலும் சேர்த்து கொள்வதாக இல்லை. நாடாளுமன்றத்தேர்தல் தொடர்பான பூர்வாங்க பணிகளை தொடங்கி விட்டோம்.

தி.மு.க. செய்த துரோகம்

தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு கடுமையாக அதிருப்தி உள்ளது. ஜெயலலிதாவின் திட்டங்கள் குறித்து மக்களிடையே எடுத்துச்சொல்லி வருகிறோம். நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் தரவேண்டும் என்றார்கள். தற்போதும், நாடாளுமன்ற தேர்தல் வரும் காரணத்தினாலே ஆயிரம் ரூபாயை பொங்கல் பரிசாக அறிவித்துள்ளார்கள். நீங்கள் (மு.க.ஸ்டாலின்) அப்போது கேட்ட ரூ.5 ஆயிரத்தை இப்போது கொடுங்கள்.

கரும்பு விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர அரசு கரும்பை கொள்முதல் செய்ய வேண்டியது தானே. அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கரும்பை விளைய வைத்துவிட்டார்கள். இப்போது அவர்கள் கரும்பை எங்கே கொண்டு போவார்கள். விவசாயிகளுக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை தி.மு.க. செய்துள்ளது.

ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட கமிஷன் அறிக்கை அளித்துள்ளது. அதில், சசிகலா மற்றும் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அ.தி.மு.க.வின் நிலை. ஆனால் வடிகட்டின பொய்யை சசிகலா தெரிவித்து வருகிறார். ஆஞ்சியோ சிகிச்சை செய்ய ஜெயலலிதா ஒத்துக்கொண்ட போதும், ஏன் அந்த சிகிச்சையை செய்யவில்லை. ஏன் வெளிநாடு கொண்டு போகவில்லை.

கமிஷனில் தெளிவாக உள்ளது. ஜெயலலிதா அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார் என்று உள்ளது. உண்மையை மறைத்து பேசக்கூடாது. அன்றைக்கு 4 பேர் இருந்தார்கள். அன்று மாலையிலேயே அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். அவ்வாறு அறுவை சிகிச்சை செய்திருந்தால் 2021-ல் ஜெயலலிதா ஆட்சியை பிடித்திருப்பார். எனவே, ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் நாங்கள் எதிர்பார்க்கிற ஒரே நீதி. ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை சும்மா விடாது. அவர்களை தூங்கவிடாமல் நிச்சயமாக செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story