நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை புளியந்தோப்பு திரு.வி.க.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 38). துப்புரவு பணியாளரான இவரிடம், புளியந்தோப்பு நரசிம்ம நகரைச் சேர்ந்த அகஸ்டின் (38) என்பவர் புளியந்தோப்பு கே.பி.பார்க் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். மேலும் இதற்காக அகஸ்டினிடம், 2018-ம் ஆண்டு ரூ.10 லட்சத்தை பிரான்சிஸ் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் அதன்பிறகு சொன்னபடி பிரான்சிஸ்க்கு வீடு வாங்கி கொடுக்காமல் அகஸ்டின் ஏமாற்றி வந்தார். இதனால் தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி பிரான்சிஸ் கேட்டார்.
இதனால் 2021-ம் ஆண்டு வரை சிறுக சிறுக அகஸ்டின் ரூ.4 லட்சத்தை பிரான்சிஸிடம் திருப்பிகொடுத்தார். ஆனால் மீதம் ரூ.6 லட்சத்தை தராமல் ஏமாற்றிவிட்டார். இந்த மோசடி குறித்து பிரான்சிஸ் அளித்த புகாரின்பேரில் பேசின்பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அகஸ்டினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.