பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் - தி.மு.க. நிர்வாகியின் மகன் கைது


பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் - தி.மு.க. நிர்வாகியின் மகன் கைது
x

பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தி.மு.க. நிர்வாகியின் மகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அயனாவரம் உதவி கமிஷனரின் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மீனா, போலீஸ்காரர்கள் திருநாவுக்கரசு மற்றும் சூரிய பிரகாஷ் ஆகியோர் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வாட்டர் டேங்க் சாலை வழியாக செல்லும் சவ ஊர்வலத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்படுவதாக புகார் வந்தது. உடனடியாக ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.

அங்கு சவஊர்வலம் செல்வதும், இறந்தவரின் உறவினர்கள் சாலையை வழிமறித்து கோழி சண்டை விட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதும் தெரிந்தது. இதனை போலீஸ்காரர் திருநாவுக்கரசு, தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி விசாரித்தார்.

அப்போது சவ ஊர்வலத்தில் வந்த ஒருவர் திடீரென, "நான் யார், எனது அரசியல் பலம் என்னவென்று தெரியுமா?" எனக்கூறி போலீஸ்காரர் திருநாவுக்கரசை கடுமையாக தாக்கினார். இதனை தடுக்கச் சென்ற பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீனாவையும் தாக்கினார். இதில் காயம் அடைந்த இருவரும் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக அயனாவரம் திருவள்ளூர் நகரைச் சேர்ந்த குணசேகரன் (வயது 35) மற்றும் சோலை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சயன் (20) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைதான குணசேகரனின் தந்தை தாமோதரன், வில்லிவாக்கம் பகுதி தி.மு.க.துணைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story