நம்பிக்கையோடு களம் அமையுங்கள், 40 தொகுதிகளும் நம் வசமாகும் - தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்


நம்பிக்கையோடு களம் அமையுங்கள், 40 தொகுதிகளும் நம் வசமாகும் - தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
x

நம்பிக்கையோடு களம் அமையுங்கள், 40 நாடாளுமன்றத் தொகுதிகளும் நம் வசமாகும் என்று தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.52-வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, உங்கள் அனைவரையும் இந்த மடல் வழியாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எதிரிகளும், துரோகிகளும் எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து நின்று, அ.தி.மு.க.வை அழித்திடத் துடித்த நேரத்தில், தொண்டர்களின் பேராதரவோடும், அனைத்து சதிகளையும், சூழ்ச்சிகளையும் வீழ்த்தி கட்சியை மீட்டு, வீறுநடை போடச் செய்திருக்கிறோம்.

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட, ஜெயலலிதாவால், இன்னும் நூற்றாண்டுகள் கடந்தும் மக்கள் பணியாற்றும் என்று பேரறிவிப்பு செய்யப்பட, அ.தி.மு.க. 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற இந்த நேரத்தில், அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 29 மாத கால தி.மு.க. ஆட்சி, தமிழ் நாட்டின் உரிமைகளை காவு கொடுத்து மக்களின் வாழ்வை துயர் மிகுந்ததாக மாற்றிவிட்டது. மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, பத்திரப் பதிவு கட்டணங்கள் உயர்வு என்று மக்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்தியா நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது. மக்கள் நம் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையைக் காக்கும் வண்ணம், மக்களை நம்பி அ.தி.மு.க. தேர்தலை சந்திக்க இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது என்கிற வெற்றிச் செய்தி தான், தமிழ் நாட்டை தீய சக்திகளிடம் இருந்து மீட்கும் முழக்கமாக அமையும். இதை நாம் அனைவரும் மனதில் நிலைநிறுத்தி அயராது பணியாற்றிட வேண்டும்.

இந்தநாளில், ஆட்சியாளர்களின் ஊழல் ஆட்சிக்கு முடிவுரை எழுதிட நாம் அனைவரும் சூளுரை ஏற்போம், வெற்றி காண்போம். நம்பிக்கையோடு களம் அமையுங்கள். நிச்சயம் வெல்வோம். 40 நாடாளுமன்றத் தொகுதிகளும் நம் வசமாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




Next Story