9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களாக சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. அதிலும் வட உள் மாவட்டங்களில் வீசும் வெப்ப அலையால், அந்த மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரித்து வருவதை பார்க்க முடிகிறது. இது ஒரு புறம் இருக்க வெயிலுக்கு இதமாக, கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
அந்தவகையில் சென்னையில் இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் குளிர்ந்த காற்றுடன் லேசான மழை பெய்தது. கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், அதிகாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்தது. திருவண்ணாமலை, ஈரோடு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, உளுந்தூர்பேட்டை, விருத்தாச்சலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் குளிர்ந்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.