'சென்னை-பெங்களூரு பசுமை விரைவுச்சாலை டிசம்பர் மாதம் நிறைவு பெறும்' - நிதின் கட்கரி தகவல்


சென்னை-பெங்களூரு பசுமை விரைவுச்சாலை டிசம்பர் மாதம் நிறைவு பெறும் - நிதின் கட்கரி தகவல்
x
தினத்தந்தி 8 Feb 2024 10:13 AM GMT (Updated: 8 Feb 2024 12:47 PM GMT)

சாலைப் பணிகளை விரைவில் முடிப்பதற்கு மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தேவை என மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறினார்.

புதுடெல்லி,

சென்னை-பெங்களூர் இடையே பசுமை விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த சாலை 4 வழிச்சாலையாக உயர் தரத்தில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழிச் சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.

இந்நிலையில், சென்னை-பெங்களூரு இடையிலான பசுமை விரைவுச்சாலை பணிகள் வரும் டிசம்பர் மாதம் நிறைவு பெறும் என நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-

"இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் சென்னை-பெங்களூர் பசுமை விரைவுச்சாலை பணிகளை முடிப்பதற்கு முயற்சி செய்து வருகிறோம். இந்த சாலை மூலம் சென்னைக்கும், பெங்களூருவுக்கும் இடையிலான தூரத்தை 2 மணி நேரத்தில் கடக்க முடியும்.

இந்த விவகாரத்தை அரசியலாக்க நான் விரும்பவில்லை. ஆனால் சாலை அமைப்பதற்கு தேவையான அனைத்து மூலப் பொருட்களையும் பெறாமல் எப்படி விரைவாக சாலையை அமைத்து முடிக்க முடியும்? தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை அமைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து தமிழக முதல்-அமைச்சரிடம் ஏற்கனவே எடுத்துக் கூறியிருக்கிறேன்."

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார். இதே போல் கேரளாவின் கொல்லம் மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் இடையிலான பசுமை நெடுஞ்சாலைப் பணிகள் குறித்து ஆர்.எஸ்.பி. கட்சி எம்.பி. என்.கே.பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நிதின் கட்கரி, இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் செலவில் 25 சதவீதத்தை ஏற்கும்படி மத்திய அரசு வழங்கிய முன்மொழிவை கேரள அரசு ஏற்றுக்கொண்டதாகவும், இது குறித்து கேரள அரசின் அதிகாரப்பூர்வ பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், "சாலைப் பணிகளை விரைவில் முடிப்பதற்கு மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தேவை. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுரங்கங்கள் மற்றும் மூலப் பொருட்களுக்கான அனுமதிகளை வழங்குவது மிகவும் அவசியம் " என்று நிதின் கட்கரி கூறினார்.


Next Story