சிலிண்டர் விலை குறைப்பு: பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி


சிலிண்டர் விலை குறைப்பு: பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி
x

வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைப்பு மகளிர் தின சிறப்பு பரிசாக அமைந்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச மகளிர் தினமான இன்று, நமது நாட்டில் பல கோடி பெண்கள் பயன்பெறும் வகையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைக்கப்படும் என்ற சிறப்பான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக பா.ஜ.க. சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

சுமார் 10 கோடி உஜ்வாலா பயனாளிகளுக்கு வழங்கப்படும் 300 ரூபாய் மானியம், 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற நேற்றைய அறிவிப்பும், சமையல் எரிவாயு விலை 100 ரூபாய் குறைக்கப்படும் என்ற இன்றைய அறிவிப்பும், நமது தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், நமது பிரதமர் அவர்களின் சிறந்த மகளிர் தின பரிசாக அமைந்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

சமூகம், பொருளாதாரம், கலாசாரம், அரசியல் போன்ற துறைகளில் மகளிரின் பங்களிப்புகளுக்கு அங்கீகாரமும், மரியாதையும் வழங்கும் விதமாகக் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்துள்ள பெரும்பாலான நலத்திட்டங்கள், மகளிருக்கான மரியாதையையும், அங்கீகாரத்தையும் முன்வைத்தே கொண்டு வரப்பட்டுள்ளன என்பதும், பெண்களுக்கான சமத்துவமும், சம உரிமையும் ஒவ்வொரு துறையிலும் உறுதி செய்யப்படுவதன் முதல்படியாக, மக்கள் பிரதிநிதித்துவத்தில் 33% மகளிருக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்ததும் நமது பிரதமர் அவர்கள்தான் என்பதைப் பெருமையுடன் நினைவுகூர்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.


Next Story