தி.மு.க.-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு 2-ம் கட்ட பேச்சுவார்த்தை: அடுத்த வாரம் நடத்த திட்டம்


தி.மு.க.-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு 2-ம் கட்ட பேச்சுவார்த்தை: அடுத்த வாரம் நடத்த திட்டம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 8 Feb 2024 11:50 PM GMT (Updated: 9 Feb 2024 6:35 AM GMT)

தி.மு.க.-காங்கிரஸ் இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க. சார்பில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் 29-ந்தேதி காங்கிரசின் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதல் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, காங்கிரஸ் 15 தொகுதிகள் வரையில் கேட்டதாக கூறப்பட்டது. ஆனால், 10-க்கும் குறைவான தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், முதல் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதேபோல, 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளையே கேட்டுப்பெற வேண்டுமென காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.

இதற்கிடையே, பிப்ரவரி 9-ந்தேதி (இன்று) 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க. - காங்கிரஸ் இடையே திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் சனிக்கிழமை (நாளை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை அடுத்த வாரத்தில் நடத்த 2 கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. 2-ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது குறைந்தபட்சம் 12 தொகுதிகள் வரை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.


Next Story