நடத்தையில் சந்தேகம்: கிண்டி ரெயில் நிலையத்தில் மனைவியை ஓட,ஓட விரட்டி வெட்டிய கணவன்


நடத்தையில் சந்தேகம்: கிண்டி ரெயில் நிலையத்தில் மனைவியை ஓட,ஓட விரட்டி வெட்டிய கணவன்
x

வெட்டுப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

சென்னை கிண்டி ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது நடைமேடையில் நேற்று மதியம் இளம்பெண் ஒருவர் ரெயிலுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த இளம்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த அந்த வாலிபர் இளம்பெண்ணை துரத்த ஆரம்பித்தார்.

இதனால் அச்சமடைந்த அப்பெண் அவரிடமிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை விடாத வாலிபர் ஓட, ஓட விரட்டி இளம்பெண்ணை வெட்டினார். பின்னர் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். இதனிடையே உயிருக்கு போராடிய நிலையில், ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து கிடந்த பெண்ணை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மாம்பலம் ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கொலை முயற்சியில் ஈடுபட்டவர் சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பது தெரியவந்தது. இவரது மனைவி பானுமதி (வயது 26). இந்த நிலையில் மனைவி பானுமதியின் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி குடிபோதையில் வெங்கடேசன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், உறவினரை பார்க்க சென்று விட்டு கிண்டி ரெயில் நிலையம் வந்த பானுமதியை பின் தொடர்ந்து வந்த வெங்கடேசன் அவருடன் ''எங்கு சென்று விட்டு வருகிறாய்?'' எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியதும் அம்பலமானது. இதுகுறித்து மாம்பலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் ஓட,ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story