கவர்னரின் செயல் இந்திய ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துகிறது - அமைச்சர் ரகுபதி


கவர்னரின் செயல் இந்திய ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துகிறது - அமைச்சர் ரகுபதி
x

தமிழ்நாட்டின் வளர்ச்சியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்க மறுக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

சென்னை,

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து உரையாற்றிய கவர்னர், தேசிய கீதம் முதலிலும், இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும். உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால் முழுமையாக வாசிக்க விரும்பவில்லை என்று கூறி 2 நிமிடங்களில் உரையை நிறைவு செய்தார்.

இதையடுத்து கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். பின்னர், அவை முன்னவர் துரை முருகன், கவர்னர் உரையை வாசிக்கவில்லை என்றாலும் அந்த உரையை அப்படியே முழுவதுமாக பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டு கூட்டத்தொடரின் முதல் நாள் நிறைவு பெற்றது. இந்த நிலையில் சட்டசபை நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

கவர்னரின் செயல் இந்திய ஜனநாயகத்தை கொச்சைப்படுத்துகிறது. பல துறைகளிலும் தமிழகம் முன்னேறி இருப்பதை உரையில் சுட்டிக்காட்டியுள்ளோம். தமிழகம் முதன்மையாக உள்ளது என்பதை பேச கவர்னருக்கு விருப்பமில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்க மறுக்கிறார்.

கேரள கவர்னராவது, உரையில் இருந்த ஒருசில வரிகளையாவது பேசினார். ஆனால் கவர்னர் ஆர்.என்.ரவி அரசின் உரையில் இருந்து ஒரு வார்த்தையை கூட பேசவில்லை. உரையில் உள்ளதை பேசாமல், தனது சொந்த கருத்தை பேசியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story