'கருணாநிதி முதல்-அமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் விவசாயமே இருந்திருக்காது' - கனிமொழி எம்.பி.


கருணாநிதி முதல்-அமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் விவசாயமே இருந்திருக்காது - கனிமொழி எம்.பி.
x

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 7 ஆயிரம் கோடி விவசாயக் கடனை ரத்து செய்தார் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 'எல்லோருக்கும் எல்லாம்' மற்றும் தமிழக அரசின் 2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"கருணாநிதி முதல்-அமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் விவசாயமே இருந்திருக்காது. ஏனெனில், அவர் இலவச மின்சாரத்தை கொண்டு வரவில்லை என்றால் எங்களால் தொடர்ந்து விவசாயம் செய்திருக்க முடியாது என விவசாயிகள் சொல்லும் அளவிற்கு விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றியவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி.

அதுமட்டுமின்றி 7 ஆயிரம் கோடி விவசாயக் கடனை அவர் ரத்து செய்தார். இங்கே ஒடுக்கப்பட்டு நின்ற மக்கள் தலைநிமிர்ந்து நடப்பதற்காக தனது வாழ்நாள் முழுவதும் கலைஞர் கருணாநிதி பாடுபட்டார். கலைஞரின் ஆட்சியின் நீட்சியாக தற்போது ஆட்சி செய்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே முதல் முறையாக விவசாயத்திற்காக தனி பட்ஜெட்டை கொண்டுவந்தார்.

இந்த நாட்டில் விவசாயம்தான் மிகப்பெரிய தொழில். கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு வந்தபோது கடைகள், தொழிற்சாலைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்ட நிலையில், விவசாயத்தை மட்டும்தான் யாராலும் நிறுத்தச் சொல்ல முடியவில்லை."

இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.




Next Story