நகை, பணம் கேட்டு பெண்ணை வீட்டை விட்டு விரட்டினர் - கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு


நகை, பணம் கேட்டு பெண்ணை வீட்டை விட்டு விரட்டினர் - கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 Jun 2023 7:50 PM GMT (Updated: 23 Jun 2023 3:53 AM GMT)

விருதுநகர் அருகே நகை, பணம் கேட்டு பெண்ணை வீட்டை விட்டு விரட்டிய கணவர் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள நடுவப்பட்டியை சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி. இவர் ஓ.கோவில்பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவரை 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் நாகராஜுக்கு ராணுவத்தில் வேலை கிடைத்ததால் அவர் சாமுண்டீஸ்வரியை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமண ஆசை காட்டி தன்னை நாகராஜ் பாலியல் பலாத்காரம் செய்ததாக விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சாமுண்டீஸ்வரி புகார் அளித்தார். இதைதொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் நாகராஜ் சாமுண்டீஸ்வரியை திருமணம் செய்து கொண்டார் 25 நாட்கள் மட்டும் குடும்பம் நடத்திய நிலையில் சாமுண்டீஸ்வரியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு நாகராஜ் பெங்களூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் பலமுறை கேட்டும் தன்னை அழைத்துச் செல்லாத நிலையில் சாமுண்டீஸ்வரி தனது பெற்றோருடன் ஓ.கோவில்பட்டியில் உள்ள நாகராஜ் வீட்டிற்கு சென்றனர்.

அப்போது நாகராஜின் தாயார் வரதம்மாள் மற்றும் உறவினர் வீரம்மாள் ஆகியோர் 50 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கம் கொண்டு வந்தால் தான் நாகராஜுடன் குடும்பம் நடத்த முடியும் என்று கூறி விரட்டி விட்டனர். இந்நிலையில் நாகராஜ் சாமுண்டீஸ்வரியை சிவகாசியில் நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒரு வாரம் மட்டும் தங்க வைத்துவிட்டு மீண்டும் சிவகாசி பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு பெங்களூரு சென்று விட்டார். நகை, பணம் இல்லாமல் அழைத்துச் செல்ல முடியாது என்று கூறிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து சாமுண்டீஸ்வரி விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ராணுவவீரர் நாகராஜ் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story