திருவொற்றியூரில் பயங்கரம்: மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர் - போலீசில் சரணடைந்தார்


திருவொற்றியூரில் பயங்கரம்: மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர் - போலீசில் சரணடைந்தார்
x

குடும்பத் தகராறில் மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர், போலீசில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை

சென்னை திருவொற்றியூர் ஏகவல்லி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரை (வயது 51). இவருடைய மனைவி இந்திராணி (48). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். துரை, வேலைக்கு எங்கும் செல்லாமல் கடந்த 11 ஆண்டுகளாக சுற்றி வந்தார்.

இந்திராணி, திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்தார். இந்திராணி அதே தெருவில் வசித்து வரும் சகோதரியான கஸ்தூரி என்பவரது வீட்டுக்கு சென்று தனது குடும்ப பிரச்சினை குறித்து அடிக்கடி கூறிவந்தார். இது துரைக்கு பிடிக்காததால் அவர் தொடர்ந்து மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

நேற்று காலை 10.30 மணியளவில் இந்திராணி, தனது சகோதரியின் வீட்டுக்கு சென்று தலைக்கு 'டை' அடித்துவிட்டு விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது துரைக்கும், இந்திராணிக்கும் இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த துரை, வீட்டில் இருந்த உலக்கையால் தனது மனைவி இந்திராணியின் தலையிலும், வாயிலும் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த இந்திராணி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதற்குள் இந்திராணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். மோதல் பற்றி அறிந்ததும் அதே பகுதியில் வசித்து வரும் இந்திராணியின் சகோதரி கஸ்தூரியும் அங்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த துரை, "இனிமேல் இந்திராணி உங்கள் வீட்டுக்கு வரமாட்டார்" என கூறிவிட்டு சென்று விட்டார்.

இதனால் சந்தேகம் அடைந்த கஸ்தூரி, வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு சகோதரி இந்திராணி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதற்கிடையே மனைவியை கொலை செய்த துரை, நேராக திருவொற்றியூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். இன்ஸ்பெக்டர் காதர் மீரா மற்றும் போலீசார் அவரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கொலையான இந்திராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்பத் தகராறில் மனைவியை கணவரே உலக்கையால் அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story