குடும்ப தகராறில் 2 பெண் குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை - தாய் தற்கொலை முயற்சி


குடும்ப தகராறில் 2 பெண் குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை - தாய் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 5 Aug 2023 8:54 AM GMT (Updated: 5 Aug 2023 9:27 AM GMT)

திருக்கழுக்குன்றம் அருகே குடும்ப தகராறு காரணமாக 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஆயிர்பாடி பகுதியை சேர்ந்தவர் ரேவதி (வயது 28). இவருக்கும் சென்னையை சேர்ந்த மேகநாதன் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் காவியா என்ற பெண் குழந்தை இருந்தது. சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த ரேவதி பிரசவத்திற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டுக்கு வந்தார்.

இந்நிலையில் ரேவதிக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த ரேவதிக்கும் அவருடைய தாயாருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த ரேவதி தனது இரண்டு மாத பெண் குழந்தை ஹோமபிரியா மற்றும் 5 வயது குழந்தை காவியா ஆகியோரை கூட்டி கொண்டு இரும்புலி கிராம பகுதியில் உள்ள ஒரு வயல்வெளி கிணற்றில் தனது 2 குழந்தைகளையும் தூக்கி வீசி விட்டு அவரும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் இருந்து வந்த பெண்ணின் சத்தத்தை கேட்டு அங்கு சென்று பார்த்தனர். அப்போது ரேவதி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே குதித்து ரேவதியை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்த குழந்தைகளை தேடினர். இதில் 5 வயது குழந்தை காவியாவை சடலமாக மீட்டனர். பின்னர் குழந்தையை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அதே கிணற்றில் முழ்கிய இரண்டு மாத பெண் குழந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story
  • chat