ஜாபர் சாதிக்கின் சகோதரர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ்


ஜாபர் சாதிக்கின் சகோதரர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
x
தினத்தந்தி 12 March 2024 12:23 PM GMT (Updated: 12 March 2024 12:41 PM GMT)

ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

சென்னை,

கடந்த மாதம், டெல்லியில் போதைப்பொருட்கள் சிக்கியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் விவகாரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டு இருப்பது தெரியவந்தது.

அவர் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. அயலக பிரிவு துணை அமைப்பாளராகவும் இருந்தார். போதைப்பொருள் விவகாரத்தில் அவரது பெயர் அடிபட்டவுடன் அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

ஜாபர் சாதிக் இதுவரை ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 500 கிலோ 'சூடோபெட்ரின்' என்ற போதைப்பொருள் தயாரிப்பு வேதிப்பொருளை வெளிநாடுகளுக்கு கடத்தி இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜாபர் சாதிக்குக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது. அவர் தலைமறைவானார். அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. வீடு 'சீல்' வைக்கப்பட்டது.

இதற்கிடையே, தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கடந்த 9ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜாபர் சாதிக் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறைக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகள் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான மைதீன், சலீம் ஆகியோருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அனுப்பி உள்ளது.


Next Story